ரோஜாக்களை அனுப்ப ஆர்டர் கிடைக்காததால் ஓசூர் பகுதி விவசாயிகள் கவலை

Updated in 2021-Jan-16 01:20 AM

ஆர்டர் கிடைக்காததால் கவலை... காதலர் தின ரோஜாக்களை அனுப்ப, ஆர்டர் கிடைக்காததால், ஓசூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா சாகுபடி நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை பாதிக்கப்பட்டதால், சாகுபடியை விவசாயிகள் நிறுத்தினர். அந்த நிலை மாறி, தற்போது மெல்ல, மெல்ல ரோஜா சாகுபடி மீண்டும் துவங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை குறி வைத்து, தாஜ்மகால், அவலாஞ்சி உள்ளிட்ட பல்வேறு வகைகளில், 60 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். அடுத்த மாதம், 14ல் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்றுமதி ரோஜாக்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு, 50 லட்சம், ஐரோப்பிய நாடுகளுக்கு, 10 லட்சம் ரோஜாக்களை அனுப்ப விவசாயிகள் காத்திருக்கின்றனர். ஆனால், இதற்கான ஆர்டர்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து, தேசிய தோட்டக்கலைத்துறை இயக்குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: 

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டிற்கு, 100 சதவீத ரோஜாக்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு, விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று முடிவுக்கு வராததால், ஆர்டர் கிடைக்காமல் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனாவால், அங்கு செல்ல வேண்டிய, 10 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மற்ற நாடுகளுக்கு செல்லும், 50 லட்சம் ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய, மத்திய, மாநில அரசுகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை அளித்து, சரக்கு விமான கட்டணத்தை குறைத்தால் மட்டுமே, மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு, ஓசூரில் இருந்து ரோஜாக்களை ஏற்றுமதி செய்ய முடியும். இல்லாவிட்டால், நடப்பாண்டு காதலர் தின ரோஜா ஏற்றுமதி, கண்டிப்பாக பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.