ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் க்ரேக் சேப்பலின் கண்டன கடிதம்

Updated in 2021-Jan-17 07:32 AM

சர்வதேச அளவில் அணியை வழி நடத்துவது மிகப்பெரிய பெருமையாகும். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது தரத்தை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது என்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் க்ரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணியும் டி20 தொடரை இந்திய அணியும் 2-1 என கைப்பற்றியது.

தற்போது இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் குவித்துள்ளனர். இதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், சிட்னி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோரின் உதவியால் போட்டியை ட்ரா செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இறுதி நாள் போட்டியன்று இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் விஹாரி பேட்டிங் செய்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் அவர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

இதனால் கோபமடைந்த அஸ்வின் டிம் பெய்னுக்கு தக்க பதிலடி கொடுத்தார். இதன்பின் டிம் பெய்ன் வாயடைத்து போனார். டிம் பெய்னின் இந்த செயல் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இதுகுறித்து ஆஸி. முன்னாள் வீரர் க்ரேக் சேப்பல் எழுதிய கடிதத்தில் 'சர்வதேச அளவில் அணியை வழி நடத்துவது மிகப்பெரிய பெருமையாகும். எந்தவொரு சூழ்நிலையிலும் தனது தரத்தை குறைக்கும் வகையில் செயல்பட கூடாது.

40 வருடங்களுக்கு முன் நான் அதை செய்ய தவறிவிட்டேன். கேவலமான விமர்சனத்திற்கு எல்லாம் இடம் கொடுக்க கூடாது. ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும். மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் வேண்டும்' என்று க்ரேக் சேப்பல் எழுதியுள்ளார்.