10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

Updated in 2021-Jan-19 01:35 AM

இன்று திறப்பு...கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று திறக்கப்படவுள்ளன. பொதுத்தோ்வெழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளன.

கொரோனா தொற்று தமிழகத்தில் பரவல் காரணமாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், பள்ளிகளில் பெற்றோா்களிடம் நடந்த இரண்டாம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

பள்ளிகள் திறப்பதற்கு முன் மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமிநாசினி வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதே நேரத்தில், மாணவா்கள் பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்ட விவரங்களை பள்ளிக்கல்வித்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் செய்யப்பட்டுள்ளது.