குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல்

Updated in 2021-Jan-19 03:06 AM

குறுவை சாகுபடி சீசனுக்கான கொள்முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெரும் பாலானோர் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) உறுதி செய்ய வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது. குறுவை சாகுபடி சீசனுக்கான கொள்முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

குறுவை சாகுபடி சீசனில் (2020-21) அரசு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் நெல் கொள்முதல் தொடர்வதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்திய உணவு கார்ப்பரேஷன் (எப்சிஐ) ஜனவரி 16-ம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 564.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. இதற்கு முந்தைய சீசனில் (கடந்த பருவ ஆண்டு) 450.42 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது 25 சதவீதம் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நெல் கொள்முதல் மூலம் 79.24 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.1,06,516.31 கோடி விநியோகிக்கப்பட் டுள்ளதாக அரசு அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த கொள்முதலில், பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.