மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் அவுட் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை முடிவு

Updated in 2021-Jan-19 03:09 AM

மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகளை லீக் அவுட் செய்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது தயாரிப்பு தரப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் படம் வெளியாவதற்கு முந்தைய நாள் படத்தின் முக்கியக் காட்சிகள் சில இணையத்தில் கசிந்தன.

இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களுடைய ஒன்றரை வருட உழைப்பு இது, யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே, இந்தக் காட்சிகள் எங்கிருந்து எப்படி வெளியாகின என்ற விசாரணையைத் தொடங்கியது படக்குழு. இதில் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் மூலம் காட்சிகள் லீக்காகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க படக்குழு தீவிர ஆலோசனை நடத்தியது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக ‘மாஸ்டர்’ படக் காட்சிகளை பதிவேற்றியதற்காக ரூ.25 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.