வரும் 30ம் தேதி மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

Updated in 2021-Jan-22 02:42 AM

மதுரை வருகிறார்... பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழக தேர்தல் பணி குறித்து 234 சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக ஜன.30-ல் மதுரை வருகிறார்.

தமிழக தேர்தல் பணி குறித்து முக்கிய ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 30-ம் தேதி மதியம் விமானம் மூலம் மதுரை வருகிறார். அன்றைய தினம் மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார்.

பின்னர் 234 தொகுதி பொறுப்ப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களைச் சந்திக்கிறார். அப்போது தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி, கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, வெற்றி வாய்ப்புஉள்ள தொகுதிகள், வேட்பாளர்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஜே.பி.நட்டா முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜன.31-ம் தேதியும் மதுரையில் தங்கும் நட்டா பல்வேறு முக்கிய சமுதாயத் தலைவர்கள், சிந்தனையாளர்களைச் சந்திக்கிறார். பின்னர் ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனத்தைமுடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்.

நட்டாவின் இந்த வருகை மூலம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான பல்வேறு முக்கிய முடிவுகள் மதுரையில் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநில இணைப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, நிர்வாகிகள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.