சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தை கொன்ற கொள்ளையன் சுட்டுக் கொலை

Updated in 2021-Jan-27 03:07 AM

கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை... சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தை கொன்ற கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அருகே சீர்காழியில் ரயில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த தன்ராஜ். தனது மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு, நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும், தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர். அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள் சீர்காழியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.