விவசாய கடன் இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

Updated in 2021-Feb-01 01:43 AM

விவசாய கடன் இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
 
100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும். விவசாயக் கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த தொகை 2020-21ல் ரூ .1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.