மல்லிகை பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

Updated in 2021-Feb-08 11:16 AM

மல்லிகைப்பூ வரத்து அதிகரிப்பு... மதுரையில் மல்லிகை பூவின் வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.700 க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தில் சில மாதங்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப் பொழிவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 10 டன் மல்லிகை பூ வருவதுண்டு. ஆனால் தொடர் மழை மற்றும் பனிப் பொழிவால் மல்லிகை பூவின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற்போது பனிப்பொழிவு குறைந்து வெயில் நிலவி வருவதால் மல்லிகை பூவின் வரத்து 2 டன்னாக உயர்ந்துள்ளது.

இதனால் கிலோ 3000 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது 700 ஆக குறைந்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக கொடைக்கானல், ஊட்டி, மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மலைப் பகுதிகளில் விளையக்கூடிய பச்சை பட்டாணியின் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது பச்சைப்பட்டாணி வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.20 க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.