Updated in 2021-Feb-14 04:24 AM
அபுதாபியில் கொரோனா பாதிப்புடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக அவரது நண்பரும் கைதானார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அபுதாபியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் பொது இடத்தில் சுற்றித்திரிந்தார். மேலும் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தெரிவிக்கும் வகையில் பரிசோதனை முடிவை மொபைல் மூலம் மற்றொரு வாலிபரை வீடியோவாக பதிவு செய்ய வைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய இந்த செயலால், வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து அபுதாபி நீதித்துறை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததாலும் இருவருக்கும் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் திர்ஹாம் முதல் 50 ஆயிரம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என நீதித்துறை தெரிவித்துள்ளது.