மேலும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்குவதாக இந்தியா உறுதி; அமைச்சர் சன்ன ஜயசுமன தகவல்

Updated in 2021-Feb-22 08:37 AM

இந்தியா உறுதியளித்துள்ளது... மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அங்கீகாரத்தின் பின்னர் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக கடந்த 18 ஆம் திகதி அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது.

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த 500,000 ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இலங்கை நன்கொடையாகப் பெற்ற பின்னர், ஜனவரி 29 ஆம் திகதி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது.

முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸார் என முன்கள ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், பொது மக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.