இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிப்பு; திமுக தலைவர் கடும் விமர்சனம்

Updated in 2021-Feb-23 01:56 AM

இடைக்கால பட்ஜெட் குறித்து திமுக தலைவர் விமர்சனம்... தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக அதிகரித்ததை விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 'கஜானாவை முற்றும் காலி செய்தும், பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் கோரப்பசி அடங்கவில்லை' என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று (பிப்.,23) தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக திமுக.,வினர் பேச வாய்ப்பளிக்குமாறு கோரியதை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

திமுக வெளிநடப்பு செய்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனை சுமத்தியுள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு வருகிறது.

முதல்வரும், துணை முதல்வரும் தமிழக மக்களுக்கு, என்றும் எளிதில் நீங்காத மாபெரும் நிதிப்பேரிடரையும், நிதி நெருக்கடியையும் உருவாக்கி விட்டார்கள். 2006 - 2011 வரையிலான திமுக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி. இறுதிக் கணக்கு வரும் போது இன்னும் அதிகரிக்கும்.கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவு மக்களுக்கு உயிர் வாழ்வதற்கு நேரடி பண உதவியை, பலமுறை மன்றாடிக் கேட்டும், வழங்கிட முன்வரவில்லை.

தற்போது 1000 கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் பணத்தை எடுத்து, தண்ணீராக தாராளமாக வாரி இறைத்து, விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்து, தமிழகத்தின் நிதி ஆதாரத்தில் கை வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட, மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழகத்தை ஏற்படுத்தி, இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள்.கஜானாவை முற்றும் காலி செய்தும், இன்னும் இந்த இருவரின் கோரப்பசி அடங்கவில்லை. இதனால் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\