ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற சூரரை போற்று படம்

Updated in 2021-Feb-26 03:33 AM

அடுத்த கட்டத்தில் சூரரை போற்று... சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. 

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலில் ‘சூரரைப்போற்று’ படமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. 

சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி) ஆகிய பிரிவுகளில் சூரரைப் போற்று இடம்பெற்றுள்ளது. வருகிற மார்ச் 15-ந் தேதி ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறும் படங்களின் இறுதிப்பட்டியல் வெளியாகும், அதில் சூரரைப்போற்று இடம்பெறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆஸ்கர் விருது விழா வருகிற ஏப்ரல் 25-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.