சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு

Updated in 2021-Feb-28 12:43 PM

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு... நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் விறுவிறுப்பு தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இனி தேசிய தலைவர்கள் இங்கு சர்வசாதாரணமாக வந்து செல்வார்கள். அதிலும் பாஜக தமிழகம் மீது தனி கவனம் செலுத்தும். இந்நிலையில் விழுப்புரம், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

விமான நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கை அசைத்துவிட்டு பின்னர் புறப்பட்டு சென்றார். முதலில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் அமித் ஷா, அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் காரைக்கால் புறப்பட்டு செல்கிறார். அங்கு பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிற்பகல் 3 மணியளவில் விழுப்புரம் செல்லும் அமித் ஷா மாநில மையகுழு கூட்டத்திலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் 8 மணிக்கு மீண்டும் சென்னை வந்து தனி விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அதிமுக ஏற்கனவே பாமக உடன் தொகுதி பங்கீடு செய்துவிட்ட நிலையில் இன்று பாஜக உடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரப்புரை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமித் ஷா அதிமுகவினருடன் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் என்பதால் ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை வரை பரப்புரை இருக்கும்.