திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா தெப்போற்சவம்

Updated in 2021-Feb-28 12:44 PM

மாசி திருவிழா தெப்போற்சவம்... திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா 11ஆம் நாளான சனிக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரவில், சுவாமி குமரவிடங்கப் பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி பல்லக்குகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். 11ஆம் நாளான சனிக்கிழமை தெப்போற்சவம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவா் மண்டகப்படிக்கு வந்தனா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, இரவில் சுவாமியும் அம்மனும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளத்தில் உள்ள திருநெல்வேலி நகரத்தாா் மண்டகப்படிக்கு வந்தனா்.

அங்கு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா், நள்ளிரவில் சுவாமியும், அம்மனும் தெப்பத்தேரில் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் அலுவலா்கள், நகரத்தாா் மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.