புதுச்சேரி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து

Updated in 2021-Feb-28 01:41 AM

சபாநாயகர் ராஜினாமா... புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் தமிழிசைக்கும், சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏல்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணனைத் தவிர்த்து மற்றவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன், அருள்முருகன் உள்ளிட்டோர் இன்று இணைந்தனர். இவர்களுடன் சபாநாயகரின் சொந்தத் தம்பியான வி.பி.ராமலிங்கம் அவரது மகன் வி.சி.ரமேஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் சபாநாயகரும் பாஜகவில் இணைவார் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் தமிழிசைக்கும், சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நான் வகிக்கும் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை மட்டும் என் சுய முடிவின்படி ராஜினாமா செய்கிறேன். இதனை இன்றே ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிவக்கொழுந்து தனது சபாநாயகர் பதவியை மட்டும் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.