அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர்-துணை முதலமைச்சர் ஆலோசனை

Updated in 2021-Mar-01 11:49 AM

அதிமுக ஆலோசனை... தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க, தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜக.வுடன் தொகுதி பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரச்சார வியூகம், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் சேதுராமன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் - ஐ சந்தித்து பேசினார். அதிமுக கூட்டணியில் அமைந்துள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இரட்டை இலை சின்னத்தில் 3 தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.