விலை வீழ்ச்சி அடைந்ததால் அறுவடை செய்யாமல் செடியிலேயே கருகும் தக்காளி

Updated in 2021-Apr-07 08:55 AM

செடியிலேயே கருகுகிறது... தக்காளி விலை வீழ்ச்சியால் அதனை பறிக்காமல் தோட்டத்திலேயே விட வேண்டிய அவலம் ஏற்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் செடிகளிலேயே தக்காளி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாகளில் சுமாா் 2,000 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா். ஒரு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் செலவு செய்து தக்காளி பயிரிட்டுள்ளனா். தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

மொத்த விலையில் ஒரு கிலோ ரூ. 5-க்கும், சில்லரை விலையில் ரூ. 7 முதல் 10 க்கும் தக்காளி விற்பனையாகிறது. இதனால் உற்பத்திச் செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனா். கட்டுப்படியான விலை கிடைக்காத காரணத்தால் ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூளகிரி, கெலமங்கலம், பாகலூா் உள்ளிட்டப் பகுதிகளில் தக்காளியை அறுவடை செய்ய முடியாமல் செடியிலேயே விட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதால் தக்காளியை வாங்க வியாபாரிகளும் வருவதில்லை. எனவே கடனையும் அடைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனா். தேங்கியுள்ள தக்காளியை வெளி மாவட்டங்களுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ விற்பனைக்கு அனுப்பி வைக்க முடியாததால் தேக்கமடைந்துள்ளது. 
தக்காளி விலை குறைவால் அதை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனா். இதனால் தக்காளியைப் பறிக்க ஆளின்றி தோட்டத்திலேயே கருகி வருகிறது.