கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி

Updated in 2021-Apr-08 12:30 PM

2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்... பிரதமர் மோடி கடந்த மார்ச் 1-ந் தேதி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக் கொண்டார். இந்தநிலையில் 37 நாட்களுக்கு பிறகு மோடி 2-வது டோஸ் தடுப்பூசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) இன்று காலை 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். கொரோனா வைரசை தோற்கடிப்பதற்கான வழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் ஒன்று. தகுதி பெற்ற அனைவரும் உங்களுக்கான தடுப்பூசியை விரைவில் எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் 2 நர்சுகள் ஈடுபட்டனர். அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த பி.நிவேதா மற்றும் பஞ்சாபை சேர்ந்த நிஷா சர்மா ஆவார்கள். இதில் நிவேதா ஏற்கனவே பிரதமர் மோடிக்கு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியவர் ஆவார்.

பஞ்சாபை சேர்ந்த நர்சு நிஷாசர்மா கூறும்போது, “கோவேக்சின் 2-வது டோசை பிரதமர் நரேந்திர மோடிக்கு செலுத்தினேன். அவர் எங்களிடம் பேசினார். அவரை சந்தித்து அவருக்கு தடுப்பூசி செலுத்தியது எனக்கு ஒரு மறக்க முடியாது தருணம்” என்றார்.

இந்தியாவில் இதுவரை 9.01 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஒரே நாளில் 29.79 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 32.92 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 25.26 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி தெரிவித்து உள்ளது. ஒரே நாளில் 12.37 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.