திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா

Updated in 2021-Apr-08 12:31 PM

கொரோனா உறுதியானது... திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும், அந்த நேரத்தில் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். திமுக எம்.பி., கனிமொழி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், பிபிஇ கிட் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து ஓட்டளித்து சென்றார். அவர் குணமடைந்து நேற்று (ஏப்.,7) வீடு திரும்பினார்.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டசபை தொகுதி வேட்பாளருமான துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கான இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட காங்., வேட்பாளர் செல்வபெருந்தகை என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.