ரஞ்சனுக்கு பதில் ஐ.ம.சக்தி உறுப்பினர் அஜித் பெயர் அறிவிக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் அமளி

Updated in 2021-Apr-08 12:31 PM

கடும்எதிர்ப்பு... கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பெயர் அறிவிக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதனால் ஏற்பட் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் குறித்து சபாநாயகர் எடுத்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று  கருப்பு பட்டிகளை அணிந்திருந்ததோடு, பதாதைகளையும் ஏந்தி எதிர்ப்பு வெளியிட்டனர்.

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று அறிவித்தார். மேலும் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் அஜித் மான்னப்பெருமவின் பெயர் ரஞ்சனின் வெற்றிடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றில் எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து அமளிதுமளியில் ஈடுபட்டனர்.