மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

Updated in 2021-May-06 07:54 AM

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

32 அணிகள் பங்கேற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), செல்சியா (இங்கிலாந்து) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. அரைஇறுதிப்போட்டி 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.

இதில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி-பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது

2-வது பாதி ஆட்டத்திலும் மான்செஸ்டர் சிட்டி அணி தொடர்ந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடும் நெருக்கடி அளித்தது. முடிவில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தியது. ஒட்டு மொத்தத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி, ரியல் மாட்ரிட்-செல்சியா அணிகள் இடையிலான அரை இறுதிபோட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ளும்.