இரண்டு நாட்கள் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட பப்ஜி மதன்

Updated in 2021-Jun-24 02:44 AM

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்... இரண்டு நாள் போலீஸ் விசாரணைக்கு பிறகு பப்ஜி மதன் மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டான்.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆபாசமாக பேசியதாக வந்த புகாரில் கைது செய்யப்பட்ட டாக்சிக் மதன், ஏழை, எளியோருக்கு உதவுவதாக கூறி தன்னுடன் விளையாட இணையும் சிறுவர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தியது. மதனின் பண மோசடிக்கு மனைவி கிருத்திகா போல், அவனது பெண் தோழிகள் வேறு யாரெல்லாம் பணம் பெற்றுக் கொண்டு உதவினர்? மதனின் வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் யாருடையது? என்ன காரணத்திற்காக பணம் அனுப்பப்பட்டது ? போன்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பப்ஜி மதனை வருகிற 7-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.