கூந்தல் ஆரோக்கியத்திற்கு மரத்தால் செய்த சீப்பை பயன்படுத்துங்கள்

Updated in 2021-Jul-28 11:47 AM

மரத்தால் செய்த சீப்பை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

கூந்தல் அழகின் மீது பெண்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். தலைமுடி லேசாக கொட்ட ஆரம்பித்தால் கூட மிகவும் வருத்தப்படுவார்கள். கூந்தல் பராமரிப்பு பொருட்கள் புதிது புதிதாக சந்தையில் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றுள் தலைமுடி பராமரிப்பில் நாம் பயன்படுத்தும் சீப்பு முக்கியமானது. அதிலும் மரத்தால் செய்த சீப்பை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

மரச்சீப்பை கொண்டு தலைவாரும் போது முடியின் வேர்க்கால்களில் இயற்கையாக சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் முடியின் நுனிவரை சீராக கொண்டு போய் சேர்க்கப்படும். இதன் மூலம் தலையில் பொடுகு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

 
மரத்தால் செய்த சீப்பை கொண்டு வாரும் போது தலையில் இருக்கும் அக்குபிரஷர் புள்ளிகளில் சரியாக அழுத்தம் கொடுக்கப்பட்டு தூண்டப்படுகின்றன. மரச்சீப்பு முடியின் வேர்க்கால்களுக்கு சீரான ரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது.

பிளாஸ்டிக் சீப்பு உலோகத்தால் செய்த சீப்புகளை பயன்படுத்தி தலைவாரும் போது அதிக வெப்பம் உருவாகிறது. இதன் காரணமாக வேர்க்கால்கள் பாதிக்கப்படுகின்றன. மரச்சீப்பை சரியான முறையில் பராமரிப்பது அவசியமானது. எண்ணெய் பசை அழுக்கு இல்லாமல் கழுவி ஈரப்பதம் இல்லாமல் நன்கு காயவைத்து பயன்படுத்த வேண்டும். சீப்பில் உள்ள எண்ணெய்ப்பசை நீங்குவதற்கு தலைமுடிக்கு உபயோகிக்கும் ஷாம்புவை கொண்டு கழுவி காயவைத்து பயன்படுத்தலாம்.

கூந்தலின் தன்மைக்கேற்ப மரச்சீப்புகளை தேர்ந்தேடுக்க வேண்டும். சுருட்டை தலைமுடி உள்ளவர்கள் அகன்ற குட்டையான பற்களை சீப்பை பயன்படுத்த வேண்டும்.