பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்

Updated in 2021-Aug-03 07:49 AM

பிசாசு-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் 'கல்ட்' நிலையை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 'பிசாசு 2' திரைப்படம், ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து, நடிகர்கள் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த பிசாசு-2 படத்தின் போஸ்டர் 1960 ஆம் ஆண்டு வெளியான ஹிட்ஸ்காக்கின் சைக்கோ படத்தின் மிக முக்கிய காட்சியான குளியலறை கொலை காட்சியை நினைவுபடுத்துவது போல் இருப்பது இந்த லுக்கின் சிறப்பம்சம். விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.