வர்றாரு... வர்றாரு... ஆலோசகராக இந்திய அணிக்கு தோனி மீண்டும் வர்றாரு

Updated in 2021-Sep-09 11:56 AM

வர்றாரு... தோனி மீண்டும் வர்றாரு...ஓராண்டுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியை டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் அழைத்திருக்கிறது இந்திய அணி.

இந்த முறை அவரது ஹெலிகாப்டர் ஷாட்களை ரசிகர்கள் பார்க்க முடியாது. மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் காணக் கிடைக்காது. ஆனால் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் அவரது தலைமைப் பண்பை மட்டும் நிச்சயமாகப் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது அவர் அணியில் இடம்பெறவில்லை, இந்திய டி-20 அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆடுகளத்துக்கு வெளியே இருந்தபடி அணியை அவர் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டும் அணியின் ஆலோசகராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டதாக டி-20 அணியை அறிவித்தபோது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

விராட் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழக வீரர் அஸ்வின் அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார். அண்மையில் இலங்கைக்கு சென்ற அணிக்கு கேப்டனாக இருந்த ஷிகர் தவான் அணியில் இடம்பெறவில்லை. லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலுக்கும் இடமளிக்கப்படவில்லை. அக்ஸர் படேல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

அணியில் பல மாற்றங்கள் நடந்திருந்தாலும் தோனியின் வருகையே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. ஒரு நாள் போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்பார்த்தபடி ஆடாத கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தோனியின் வருகைக்கு பல முன்னாள் இந்நாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும், நட்சத்திரங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இதை "மாஸ்டர் ஸ்ட்ரோக்" என்று கூறியிருக்கிறார். முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர், ரஜினியின் பிரபல வசனமான "சும்மா அதிருதில்ல" என்பதை ஹிந்தியில் குறிப்பிடும் மீமை பகிர்ந்திருக்கிறார்.