அணியில் இருந்து என்னை நீக்கியது வேதனை அளிக்கிறது என இம்ரான் தாஹிர் தகவல்

Updated in 2021-Sep-12 03:44 AM

உலகக்கோப்பை போட்டியில் நான் விளையாட தயாராக இருந்தேன். ஆனால் என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். எனக்கு இது மிகவும் வருத்தமளிக்கிறது. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்று தென் ஆப்பிரிக்கா அணி வீரர் இம்ரான் தாஹிர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்கின்றன. இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்கள் அணியில் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் இந்திய அணி தங்களுடைய வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. யாரும் எதிர்பாராதவிதமாக இந்திய அணியின் வழிகாட்டியாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகமும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தங்களது அணியின் பட்டியலை வெளியிட்டது. இந்த அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை தெரிவித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, "உலகக்கோப்பை போட்டியில் நான் விளையாட தயாராக இருந்தேன். ஆனால் என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். எனக்கு இது மிகவும் வருத்தமளிக்கிறது. பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

கிரேம் ஸ்மித் கடந்த ஆண்டு என்னை தொடர்பு கொண்டு, உலக கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என்று தெரிவித்தார். அதன் பின்னர் அவர் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை. கடந்த பத்து வருடங்கள் நான் நாட்டுக்காக விளையாடி இருக்கிறேன். இப்போது என்னை அவர்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.
 
இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாட்டுக்காக நான் ஒரு உலக கோப்பையை வென்று தரவேண்டுமென்று கனவுடன் காத்திருந்தேன். இதுவரை எனக்கு வாய்ப்பளித்த அணி நிர்வாகத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் நான் ஓய்வு பெற திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் 50 வயது வரை கூட நான் விளையாடுவேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.