காற்றினிலே திரைப்படத்தின் இயக்குனரை பாராட்டிய பாக்யராஜ்

Updated in 2021-Sep-24 10:00 AM

18 வயது இளைஞன் இயக்கிய காற்றினிலே திரைப்படம் அற்புதமாக இருந்ததாக பிரபல இயக்குனர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார்.

18 வயதே பூர்த்தி அடைந்த ஈஸ்வர் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர் காற்றினிலே எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 50 நிமிடங்களே ஓடும் இந்த திரைப்படத்தை பார்த்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஆகியோர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். திரையரங்கில் வெளியான காற்றினிலே திரைப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், "அனைத்து படங்களிலும் முதல் காட்சி என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க மிக முக்கியமான பகுதியாக கருதப்படும்.

அதனை இந்த குழு மிக அற்புதமாக செய்து காட்டியுள்ளது. ஈஸ்வர் கோபாலகிருஷ்ணனின் தன்னம்பிக்கையை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். அதுமட்டுமில்லாமல் படத்தின் பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது மகனின் திறமையைப் புரிந்து கொண்டு சரியான வழிகாட்டி ஊக்குவித்த ஈஸ்வரின் பெற்றோருக்கு நான் மனமார நன்றி கூறிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

காற்றினிலே படம் குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறுகையில், "இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அற்புதமான படத்தை ஈஸ்வர் தயாரித்துள்ளார். படத்தின் தரம் என்பது பாராட்டும் அளவிற்கு மிக சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கடின உழைப்பும் படத்தில் தெளிவாக பிரதிபலிக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் ஈஸ்வர் கூறுகையில், நான் ஆறாம் வகுப்பிலிருந்து நண்பர்களுடன் இணைந்து குறும்படம் தயாரித்ததாகவும் அதன்பின் ஒரு நல்ல படத்தை இயக்க விரும்பி இறுதியில் காற்றினிலே உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

அதோடு தனது பெரியப்பா ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் வழி காட்டியதாகவும் படத்தில் தனக்கு பிடித்த இயக்குனர் கௌதம்மேனன் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். காற்றினிலே திரைப்படத்தில் அருண் கிருஷ்ணா-தக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஈஸ்வரின் தாய் விஜி பாலசந்தர் தயாரித்த இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் யோவான் மனு.