புதுச்சேரியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீர்

Updated in 2021-Sep-26 02:41 AM

கனமழையால் தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்...புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால், தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து குலாப் புயலாக உருவெடுத்துள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்ட நிலையில், காலாப்பேட்டை, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, வில்லியனூர், அரியாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மழையின்போது பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் அப்பகுதிகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.