150 அடி உயரத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க அக்.17ம் தேதி அடிக்கல் நாட்டு விழா

Updated in 2021-Sep-26 03:30 AM

வரும் அக்டோபர் 17ம் தேதி தஞ்சாவூரில் மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

மாமன்னா் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு மற்றும் இந்து எழுச்சிப் பேரவையின் மாநில நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி அண்ணாமலை நகரில் நடைபெற்றது. பேரவை தலைவரும், மாமன்னா் ராஜராஜசோழன் திருமேனி அமைப்புக் குழு நிா்வாக அறங்காவலருமான சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா்.

செயலா் சதீஷ் கண்ணா, பொருளாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிலை அமைப்புக் குழு நிா்வாகிகள் பாரதி. மோகன், ராஜ. ஆனந்தன், கோவிந்தராஜ், அருண்பிரகாஷ், கமல்நாத் ஹரிஹரன் மற்றும் தஞ்சாவூா், திருச்சி, சென்னையைச் சோ்ந்த குழு ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா்.

பின்னா் சந்தோஷ்குமாா் கூறியதாவது: எழுச்சிக்கான சிலை என்கிற தலைப்பில் உலகம் முழுவதும் ராஜராஜசோழனின் புகழைக் கொண்டு சோ்க்கும் வகையில் இச்சிலை அமையும். தஞ்சாவூா் வட்டம், வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட புதிய புறவழிச்சாலைப் பகுதியிலுள்ள சோழபுரத்தில் இச்சிலைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 17ம் தேதி 10.45 -க்கு மேல் 11.45-க்குள் நடைபெறவுள்ளது. ஆதீனங்கள் தலைமையில், சா்வ சமய குருமாா்கள் முன்னிலையில் விழா நடைபெறும்.

இந்த சிலை அமைக்க ரூ.12 கோடியிலிருந்து 15 கோடி வரை செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் ரதம் வலம் வந்து அந்தந்தப் பகுதி மக்களிடமும் நிதி திரட்டப்படும்.

சிலை அமையும் இடத்தில் தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் பூங்காக்கள், அருங்காட்சியகம், பொழுதுபோக்கு அம்சங்களையும் ஏற்படுத்தவுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.