ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது... தமிழக தலைவர் அண்ணாமலை பெருமிதம்

Updated in 2021-Oct-26 02:21 AM

கோயில்கள் திறப்பு, ஆவின் 100 கோடி ரூபாய் டெண்டர் என்று சில இடங்களில் முதல்வர் செவி சாய்த்து அதை சரி செய்து கொடுக்கிறார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அதிமுகவினரும் திமுக அரசை விமர்சிக்க தான் செய்கின்றனர். அதேபோலதான் பாஜகவும் விமர்சிக்கிறது. எந்த குழப்புமும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்கிறோம்.
 
கோயில்கள் திறப்பு, ஆவின் 100 கோடி ரூபாய் டெண்டர் என்று சில இடங்களில் முதல்வர் செவி சாய்த்து அதை சரி செய்து கொடுக்கிறார். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயலாற்றி வருகிறது. திமுக பேசுவது எல்லாமே எங்களை எதிர்த்துதான்.

பார்க்கும்போது பாஜக - திமுக அரசியல்தான் நடந்து கொண்டிருக்கிறது. காலத்துக்கு தகுந்தது போல நாங்கள் மாற மாட்டோம். திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டு அரசின் கடன் பிரச்னையை சரி செய்வோம் என்றனர். ஆனால், மின்வாரியத்தில் தனியாருடன் போடப்படும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடக்க உள்ளது. அதைத்தான் சொல்கிறோம்.

அதற்கு அமைச்சர் தன் வீட்டில் அமர்ந்து, அதாவது கண்ணாடி மாளிகையில் இருந்து கல் வீச பார்க்கிறார். முதலில் அவர் வீட்டை சுத்தப்படுத்தட்டும். அவரின் வாயில் இருந்தே உண்மை வரும். இது கருத்து மோதல் இல்லை. நாம் கொடுத்த ஆதாரத்துக்கு பதிலே வரவில்லை. 20 ரூபாய்க்கு பவரே வாங்கவில்லை. ஆதாரத்தை காட்டுங்கள்' என்று செந்தில் பாலாஜி கூறினார். நாங்கள் அதற்கான ஆதாரத்தை காண்பித்துவிட்டோம்.

இதைவிட என்ன ஆதாரம் தேவை. இப்படி தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். முதல்வர் மின்வாரியத்தை கண்காணித்து, இந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்" என்றார்.