தேவதானப்பட்டி பகுதியில் வாழை சாகுபடி அதிகரிப்பு

Updated in 2021-Oct-26 02:26 AM

வாழை சாகுபடி அதிகரிப்பு... தேவதானப்பட்டி பகுதியில் தொடர் மழையால் வாழை சாகுபடி அதிகரித்துள்ளது.

தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி இந்தாண்டு அதிகரித்துள்ளது.

ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு உழவு, வாழைக்கன்று, நடவு, தொழு உரமிடுதல், களையெடுப்பு, ரசாயன உரமிடுதல் என ரூ.1,50,000 வரை செலவு செய்கின்றனர். கடந்த கொரோனா காலங்களில் போக்குவரத்து இல்லாததால், வாழை விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாலும், தொடர்மழை பெய்வதாலும் இந்த பகுதியில் வாழை சாகுபடி அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் வாழை இலை வத்தலக்குண்டு, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களில் உள்ள காய்கறி கமிஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கிருந்து சென்னை, பெங்களூரூ, திருச்சி, கோவை, திருப்பூர், புதுச்சேரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் வாழைத்தார்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.