விவசாயிகளே மறந்திடாதீங்க...நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாள் 

Updated in 2021-Nov-08 06:30 AM

நெற்பயிர் காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாள். எனவே கடைசி நாள் வரை விவசாயிகள் காத்திருக்காமல் உடன் பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் என்று தஞ்சாவூர் வேளாண் உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் நெற்பயிரினை மேற்கண்ட ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பயிர் காப்பீடு செய்தால் போதுமானது.

பயிர் காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.513 செலுத்த வேண்டும். விவசாயிகள் காப்பீடு செய்யும் பொழுது முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தில் தெளிவான முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.

கட்டண தொகையை செலுத்தி அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை இடர்பாடுகளை யாராலும் கணிக்க இயலாது என்பதால் விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே காப்பீடு செய்து கடைசி நேரத்தில் பதிவு செய்வதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.