துபாயில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்

Updated in 2021-Nov-14 10:16 AM

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வரும் நிலையில், போட்டி தொடங்க இருந்த சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. எதிர்பார்த்தபடியே முதலில் பேட் செய்த நியூசிலாந்து தடுாறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக துபாயில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரானில் இன்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஈரானில் ஏற்பட்டிருந்தாலும் அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

துபாயில் உள்ள ஜுமைரா லேக் டவர்ஸ், துபாய் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பார்க் மற்றும் டிஸ்கவரி கார்டன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் சில நிமிடங்கள் வரை இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது குறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஈரான் பிராந்தியத்தில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரத்திலிருந்து சுமார் 47 கிமீ (29 மைல்) தொலைவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் 6.1 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.