வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

Updated in 2021-Nov-19 12:30 PM

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் மகிழ்ச்சி மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல்காந்தி கூறுகையில், சத்தியாகிரகத்தின் மூலமும், அநீதிக்கு எதிராகவும் பெறப்பட்ட இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக எம்.பி.,கனிமொழி, எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன்,  நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் விவசாயிகள் போராட்டத்திற்கு வெற்றி என்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.