கொட்டித்தீர்க்கும் மழையால் குஷியான மாணவர்கள்

Updated in 2021-Nov-25 06:41 AM

தேங்க்யூ மழையே...சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது.

அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என பல இடங்களிலும் நல்ல மழை கொட்டியது.

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் பல இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை வெளுத்து கட்டியது. மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த 8 மணி நேரத்தில் திருச்செந்தூரில் மட்டும் 18 செ.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 24 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை, அரியலூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மதுரை, ராமநாதபுரம், திருவாருர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (அதி கனமழை பெய்யும்) எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த மழையால் அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் குஷியாகி உள்ளனர்.