நீ ரவுடின்னா நானும் ரவுடிதான் என ஆவேசப்பட்ட எம்எல்ஏ

Updated in 2021-Nov-27 09:39 AM

நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்றும் நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று ஆவேசமாக பேசிய வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜனால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள வடமதுரையில் தமிழக அரசின் சார்பாக வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர் என்னைப்பற்றி சமூகவலைதளங்களில் பரவக்கூடிய வதந்திகளைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் என்றும் எம்ஜிஆர் படத்தில் வரும் பாடலை போல் நான் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்றும் நீ ரவுடி என்றால் நானும் ரவுடிதான் என்று ஆவேசமாக பேசினார். இந்த பேச்சு அங்கு வந்திருந்த பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது