உறுதி... உறுதி... பாடத்திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும்

Updated in 2021-Dec-02 12:50 PM

பாடத்திட்டங்கள் அனைத்தும் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு பருவத்தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வழக்கம் போல பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் இந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் தொடர் விடுமுறை அறிவித்தனர்.

ஏற்கனவே கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க குறிப்பிட்ட கால அளவு மட்டுமே உள்ளது. இதனிடையே கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட மாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியாக கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 48 மணி நேரத்திற்கு பிறகு மழை படிப்படியாக குறைந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ஓரளவு மழை ஓய்ந்துவிட்டது. இனி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் இனி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இல்லை. பாடத்திட்டங்கள் அனைத்தும் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு பருவத்தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.