இது ஓகே... அது கிடைக்குமா? மத்திய அரசு ஊழியர்கள் கேள்வி

Updated in 2021-Dec-02 01:02 AM

எழுந்துள்ள புதிய கேள்வி...மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்களின் முக்கிய கோரிக்கை நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, வீட்டு வாடகைப்படியையும் உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலால், மத்திய அரசு ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் கடந்த 18 மாதங்களாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி பாக்கித் தொகை வழங்கப்படவில்லை. இது குறித்த அறிவிப்பு வெளியாகாததால், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு தரப்பினர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அடுத்த மாதம், மத்திய அமைச்சக செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. அகவிலைப்படி பாக்கித் தொகை விவகாரம், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு சென்று விட்டதாகவும், இது குறித்து அவர் விரைவில் முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்து விட்டால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.