ராகுல், ரஷீத் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார்

Updated in 2021-Dec-02 01:03 AM

பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளும் ராகுல் மற்றும் ரஷீத் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஐபிஎல் 2022 சீசனில் மொத்தம் பத்து ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன.

இந்த நிலையில் வரும் சீசனுக்கான 'மெகா ஏலம்' டிசம்பர் அல்லது ஜனவரியில் நடக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், லக்னோ அணிக்காக விளையாட கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கான் என இரண்டு வீரர்களிடமும் லக்னோ அணி விலை பேசியுள்ளதாக தெரிகிறது. தற்போது ராகுல், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும், ரஷீத் கான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் உள்ளனர்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளும் ராகுல் மற்றும் ரஷீத் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வாய்மொழியாக புகார் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இருவர் மீதும் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐபிஎல் அரங்கில் ஒரு ஆண்டு விளையாட தடை விதிக்கப்படும் என தெரிகிறது.

கே.எல்.ராகுலை ரூ.20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 2018 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அருமையான ஃபார்மில் இருக்கும் ராகுல், கடந்த 4 சீசன்களில் முறையே 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார்.