அடையாளம் கொடுத்தது அப்போ... அடையாளமாக மாறி வருவது இப்போ

Updated in 2021-Dec-12 06:37 AM

அது அப்போ…. இது இப்போ...ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி ருத்துராஜ் கெய்க்வாட்க்கு அடையாளம் கொடுத்தது என்ற காலம் போய், ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் அடையாளமாக மாறி வருகிறார்.

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் விளாசி ஆரஞ்ச் நிற தொப்பியை ருத்துராஜ் வென்றார். இதனால் இவரை விட்டால் திரும்பி ஏலத்தில் பிடிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட சென்னை அணி அவரை 6 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்தது.

தற்போது ருத்துராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் சீனியர்களுக்கே தனது அதிரடி ஆட்டம் மூலம் நெருக்கடி தருகிறார். விஜய் ஹசாரே கோப்பை தொடர் தொடங்கிய முதல் நாள் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், மத்திய பிரதேச அணியை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் 134 ரன்கள் விளாசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து 2வது லீக் போட்டியில் மகாராஷ்டிரா அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின.

இதில் ருத்துராஜ் கெய்க்வாட், 143 பந்துகளில் 154 ரன்கள் விளாசி அசத்தினார். இதில்14 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும் தொடர்ந்து 2 நாட்களில் 2 சதம் விளாசி அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ருத்துராஜ் தலைமையிலான மகாராஷ்டிரா அணியும் கேரள அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த ருத்துராஜ் கெய்க்வாட், 110பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 3 போட்டிகளில் 400 ரன்களை ருத்துராஜ் கெய்க்வாட் கடந்தார். இதனையடுத்து சி.எஸ்.கே. ரசிகர்கள் ருத்துராஜின் ஹாட்ரிக் சதத்தை கொண்டாடி வருகின்றனர்.

தற்போது டிவிட்டரில் ருத்துராஜ் கெய்க்வாட்டின் பெயர் தேசிய அளவில் டிரெண்டானது. இதனிடையே, ருத்துராஜ் கெய்க்வாட்டின் ஹாட்ரிக் சதத்தால் அவரை கண்டிப்பாக அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி அணியில் இடம்பெற்றாலும், அவரை பெஞ்சில் அமர வைக்க முடியாது.

ஏற்கனவே ரோகித், கே.எல்.ராகுல் என இரண்டு தொடக்க வீரர்கள் உள்ளதால் ருத்துராஜ் கெய்க்வாட்டை யாருக்கு பதிராக அணியில் சேர்ப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது.