சிறந்த மருத்துவக்குணங்கள் நிரம்பிய வெந்தயம்

Updated in 2021-Dec-12 06:38 AM

வெந்தயம் ஒரு குளிர்ச்சி வாய்ந்த பொருள். மேலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது இந்த வெந்தயத்தில். பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்வதில் வெந்தயம் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

இது சித்த மருத்துவம் முதல் பாட்டி வைத்தியம் வரை அனைத்து மருத்துவ முறையில் பயன்பாட்டில் இருக்கின்றது. சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
 
இதனை தினமும் சேர்த்து கொள்வதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.

ஜுரம் மற்றும் நெடுநாட்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள் பல மருந்துகளை உட்கொண்டு அவர்களின் உணவு குழாய் மற்றும் ஜீரண உறுப்புகளில் புண்கள் ஏற்பட்டிருக்கும். அரிசி கஞ்சியில் சிறிது வேக வைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வரலாம். இதனால் உடல் பலம் பெறும் வயிற்றுப் புண் குணமடையும்.

நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.