தென் ஒன்ராறியோவில் இரண்டு லட்சம் மக்கள் தவிப்பு

Updated in 2021-Dec-13 01:00 AM

லட்சக்கணக்கான மக்கள் தவிப்பு... தென் ஒன்ராறியோவில் பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், 200,000 பேர்களுக்கும் மேலான மக்கள் தவித்துப்போயுள்ளனர்.

தென் ஒன்ராறியோவில் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உறுதி செய்துள்ள Hydro One, இதனால் 200,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஊழியர்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டால் உடனடியாக உதவிக்கு முன்வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தென் ஒன்ராறியோ பொலிசார் தெரிவிக்கையில், மின் கம்பிகள் அறுந்தது தொடர்பிலும், மரங்கள் சாய்ந்தது மற்றும் குப்பைகள் தொடர்பிலும் தங்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
 
ஏற்கனவே, பலத்த காற்று தொடர்பில் சுற்றுச்சூழல் கனடா பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. மணிக்கு 90 முதல் 120 கி.மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மதியத்திற்கு மேல் மற்றும் மாலை நேரங்களில் தொடரும் எனவும் கூறப்பட்டிருந்தது.

பொதுமக்கள் பலர் மாலை நேரத்தில் பொலிசாருக்கு அழைத்து உதவி கோரியதாக கூறப்படுகிறது. காயம்பட்டால் மட்டும் 911 இலக்கத்திற்கு அழைக்கவும் பொலிஸ் தரப்பில் அறிவுறுத்தியிருந்தனர்.