இந்திய அளவில் தமிழகம் நம்பர் ஒன் இலக்கை எட்டும்

Updated in 2021-Dec-13 01:01 AM

அமைச்சர் உறுதி...தொழில்துறையை மேம்படுத்தி இந்தியாவில் தமிழகம் தான் நம்பர் ஒன் என்ற இலக்கை எட்டுவோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், நிர்வாக இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா முன்னிலையில் நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு முதலீட்டு கழகத்தில் சார்பாக பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினர்.

இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
பாதுகாப்பு தொழிற்கூடங்கள் அமைக்க உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, தர்மபுரி, கோயம்புத்தூர், திருச்சி பகுதிகளில் முக்கியமாக பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக உள்ளன. சிவகாசியை மையமாக வைத்து பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல், பட்டாசு, அச்சு, தீப்பெட்டி, பிரிண்டிங், வேளாண் தொழில்கள் உள்ளன. மருத்துவ பேண்டேஜ் தொழில் என பாரம்பரிய தொழில்கள் உள்ளன. பட்டம்புதூர் அருகில் டெக்ஸ்டைல் பார்க் அமைக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஒன்றிய அரசு சார்பில் அமைய கூடிய டெக்ஸ்டைல் பார்க் விருதுநகர் பகுதியில் அமைய வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தல்படி, ஒன்றிய அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

சென்னை - கன்னியாகுமரி, மதுரை - தூத்துக்குடி என இரு முக்கிய தொழில் வழித்தடங்கள் விருதுநகர் மாவட்டத்தின் வழி செல்கிறது. தமிழ்நாடு தான் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறி உள்ளார்.

வருகிற தொழிற்சாலைகள் தமிழகம் முழுவதும் பரவலாக அமைய வேண்டும் என கூறி உள்ளார். 6 மாத காலத்தில் ரூ.60 ஆயிரம் கோடிக்கான தொழில் முதலீடுகளை பெற்றுள்ளோம்.
தூத்துக்குடி, கங்கைகொண்டான், நாங்குநேரி பகுதிகளில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவரும் முனைப்போடு செயல்படுகிறோம். மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளிலும் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

10 ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் எக்கானமி என்ற இலக்கை எட்ட முடியும். இந்தியாவில் தமிழகம் தான் நம்பர் ஒன் என்ற இலக்கை எட்டுவோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.