அசத்தல் அறிமுகம்... குழந்தைகளுக்கு தனி படுக்கை வசதி

Updated in 2022-May-11 05:13 AM

குழந்தைகளுக்கு என தனிப் படுக்கையை ரயில்வே துறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு ரயில்வேயின் லக்னெள மெயிலின் மூன்றடுக்கு ஏசி பெட்டியில், தாயாா் தங்கள் குழந்தைகளுடன் வசதியாகத் தூங்கும் வகையில், குழந்தைகளுக்கு என தனிப் படுக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படுக்கைகளின் புகைப்படங்கள் வடக்கு ரயில்வேயின் ட்விட்டா் பக்கத்திலும் வெளியிடப்பட்டன. அதில், குழந்தைகளுக்கான இந்தப் படுக்கை எளிதில் மடக்கக் கூடியது, தடுப்புகளைக் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை தூங்கும்போது கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக கீழ்ப் படுக்கையுடன் குழந்தைகளுக்கான படுக்கைகள் இணைக்கப்பட்டு, அதில் பட்டைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ரயில்களில் தற்போது குழந்தைகளுக்கு என பிரத்யேக இருக்கைகளோ, படுக்கைகளோ கிடையாது. ஆகையால் குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மாா்கள், பயணச்சீட்டு பரிசோதகரையோ அல்லது சக பயணிகளையோ அணுகி, கீழ்ப்படுக்கைகளை கேட்டுப் பெறும் சூழல் நிலவுகிறது. இதனைப் போக்கும் விதத்தில் ரயில்வே இந்தப் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. அன்னையா் தினத்தையொட்டி, தாய்மாா்களுக்குப் பரிசாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.