யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறியவர் எடுத்த வீடியோ வைரல்

Updated in 2022-May-13 02:25 AM

திண்டுக்கல் அருகே இன்று காலை யானைகளிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறி வெகுநேரம் அங்கேயே இருந்த நபர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் தாண்டிக்குடி பகுதியில் இன்று (மே.12) காலை வேலைக்கு சென்ற நபர் யானைகளிடமிருந்து தப்பிக்க அருகிலிருந்த மரத்திலேறி உள்ளார். அவர் ஏறியிருந்த மரத்தை யானைகள் நீண்ட நேரம் சுற்றி வந்துள்ளன. கூச்சலிட்டால் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ எனக் கருதி அவர் உயிரை கையில் பிடித்து அமர்ந்துள்ளார்.

அதேசமயம் தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கே.சி.பட்டி பகுதியில் 9 யானைகள் சுற்றி வந்துள்ளன. இதனை பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஆத்தூர் தாலுகாவுக்குட்பட்ட ஆடலுர், பன்றிமலை, கே.சி.பட்டி, பாச்சலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு தொடர்ந்து யானைகள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 10 நாள்களுக்கு முன் பொதுமக்களை அச்சுறுத்திய குட்டை கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் கலீம், சின்னதம்பி என்ற 2 கும்கி யானைகள் டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து கொண்டு வரப்பட்டன. ஆனால் தற்போது வரை குட்டை கொம்பன் யானையை பிடிக்க முடியவில்லை.

யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.