பிறநாட்டு தூதர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் ரணில்

Updated in 2022-May-15 02:16 AM

பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான், அமெரிக்கா, சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். இலங்கையின் நிதியுதவிக்கான சர்வதேச மன்றத்தை உருவாக்குவது குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடி அறிக்கையிடுவதற்காக ஜப்பான் செல்லவுள்ளதாக ஜப்பானிய தூதுவர் தெரிவித்ததாக அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகருடனான கலந்துரையாடல் பொருளாதார மீட்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியதுடன், இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்தார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஜப்பானிய தூதுவர் உறுதியளித்தார். இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காக ஏனைய வெளிநாட்டு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இரு தூதுவர்களும் கலந்துரையாடினர்.

அமெரிக்க கருவூலக் குழுவின் விஜயம் குறித்து பிரதமர் விக்ரமசிங்க, அமெரிக்கத் தூதுவருடன் கலந்துரையாடினார். 19வது திருத்தச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்களை பலப்படுத்துவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

சீனத் தூதுவருடனான சந்திப்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு சீனா விருப்பம் தெரிவித்ததுடன், நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளை மீளாய்வு செய்வதாகவும் உறுதியளித்தார்.