வீட்டுக்குள் நுழைய விடாமல் கட்டு விரியன் பாம்பை தடுத்து இறந்த வளர்ப்பு நாய்

Updated in 2022-May-16 05:06 AM

எஜமான் அவர்களை காக்க உயிர் விட்ட நாய்... எஜமானர்களின் உயிரைக் காக்க வீட்டுக்குள் பாம்பை நுழையவிடாமல் அதனுடன் போராடி வளர்ப்பு நாய் இறந்தது.

தேனி மாவட்டம், போடி அருகே, மேலசொக்கநாதபுரம் பேருராட்சி, ராமச்சந்திரன் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). திண்டுக்கல் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி ஈஸ்வரி. பள்ளி ஆசிரியை. இவர்கள் 13 ஆண்டுகளாக ஜாக்கி என்னும் நாயை பாசத்துடன் வளர்த்து வந்தனர். 

இந்நிலையில், விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர்களது மகன் லட்சுமணன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5 மணியளவில், ஜன்னல் வழியாக கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. இதைப் பார்த்த நாய் ஜாக்கி குரைத்தபடி அதை தடுத்தது.

ஆனால், பாம்பு சீறியபடி வீட்டுக்குள் நுழைந்தது. எஜமானர்கள் ஆழந்த உறக்கத்தில் இருந்ததால், பாம்பு அவர்களை கடித்து விடும் என்று அஞ்சிய ஜாக்கி, பாம்பைக் கடித்து, தடுத்து நிறுத்த முயன்றது. இந்தப் போராட்டத்தில் பாம்பு ஜாக்கியை கடித்தது. ஆனாலும் பொருட்படுத்தாமல் நாய் குரைத்தது. நாய் விடாமல் குரைக்கும் சத்தத்தை கேட்டு லட்சுமணன் எழுந்து வந்து பார்த்தார். 

அங்கு பாம்புடன் நாய் போராடி கொண்டிருந்ததை பார்த்து போடி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வீரர்கள் 5 அடி நீள கட்டுவிரியன் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். பாம்பு கடித்ததால் சிறிது நேரத்தில் நாய் உயிரிழந்தது. எஜமானர்களை காப்பாற்ற நாய் உயிரை விட்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.