மலை ரயிலுக்கு முதன்முறையாக பிரேக்வுமன் நியமனம்

Updated in 2022-Jun-17 11:42 AM

பிரேக் வுமன் நியமனம்... உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலுக்கு முதல் பிரேக்வுமன் பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலைரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1899 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மலை ரயில் போக்குவரத்து 2005 ஆம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

செங்குத்தான மலை மீது பல்சக்கரங்கள் பொருத்தப்பட்ட இருப்பு பாதையில் ஊர்ந்து செல்லும் இம்மலை ரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் மலைரயிலில் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் ஒரு லீடிங் பிரேக் மென் பணியாற்றுவது வழக்கம். மலை ரயிலை பொறுத்தவரை என்ஜின் பின்னிருந்து பெட்டிகளை மேல் நோக்கி தள்ளி செல்லும் என்பதால், அதில் பணியாற்றும் பிரேக் மென்கள் மலை ரயில் பாதையில் கிடைக்கும் சிக்னலை என்ஜின் ட்ரைவருக்கு தெரிவிப்பது - அடர்ந்த மலைகாட்டின் நடுவே செல்லும் பாதை என்பதால் இருப்பு பாதை மீது பாறைகளோ மரங்களோ விழுந்து கிடந்தால் அல்லது யானை போன்ற விலங்கினங்கள் நின்றிருந்தால் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்துவது போன்ற முக்கிய பணிகளை செய்வர்.

இப்பணிக்கு இதுவரை ஆண்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முதல் முறையாக பிரேக்வுமனாக சிவஜோதி என்ற பெண்மணியை நியமித்துள்ளது ரயில்வேத்துறை. இவர் கடந்த எட்டு வருடங்களாக குன்னூர் கோச் மற்றும் வேகன் பிரிவில் பணியாற்றி வந்துள்ள நிலையில் தற்போது இப்பணிக்கு நியமிக்கபட்டுள்ளார்.