பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண இலங்கைக்கு செல்லும் அமெரிக்க குழு

Updated in 2022-Jun-26 07:36 AM

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீா்வு காண அந்நாட்டுக்கு அமெரிக்க உயா்நிலைக் குழு நாளை செல்லவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடா்பாக இலங்கையில் வெளியாகும் நாளிதழில் வெளியான செய்தி: அமெரிக்க நிதியமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அடங்கிய குழு ஜூன் 26 முதல் 29-ஆம் தேதி வரை இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின்போது இலங்கையின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொருளாதார நிபுணா்கள், சா்வதேச அமைப்பினா் உள்ளிட்டோரை அமெரிக்க குழு சந்திக்கவுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீா்வு காணுதல், நிலையான பொருளாதாரத்துக்குத் திட்டமிட்டுதல், இலங்கை மக்களுக்கு மிகவும் ஆக்கபூா்வமான வழிகளில் அமெரிக்கா சாா்பில் உதவுதல் ஆகியவை குறித்து அந்தச் சந்திப்பின்போது பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 120 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.939 கோடி), பால்வளத் துறைக்கு 27 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.211 கோடி), பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 5.75 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.44 கோடி) நிதியுதவிகளை கடந்த 2 வாரங்களில் அமெரிக்கா அறிவித்துள்ளது.

இத்துடன் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், நிதிச் சீா்திருத்தத்துக்கான தொழில்நுட்ப உதவிக்காகவும் இலங்கைக்கு 6 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.46 கோடி) நன்கொடையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்புக்குக் கட்டுப்பாடு: இலங்கையில் தனிநபா் ஒருவா் அந்நியச் செலாவணி வைத்திருப்பதற்கான உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது.